Sunday, December 12, 2010

ஹனுமான் வேள்வி

தக்கலையில் ஹனுமன் சக்தி ஜெபவேள்வி, ஹனுமன் சக்தி ஜாகரண் சமிதி சார்பில் 12.12.2010 ஞாயிறு அன்று நடைபெற்றது. கன்யாகுமரி மாவட்டம், தக்கலை கண்டவின் சார்பில் நடைபெற்ற இந்த வேள்விக்கு ஹனுமன் சக்தி ஜாகரண் சமிதியின் மாவட்டப் பொறுப்பாளர் திரு.தெய்வப்ரகாஷ் தலைமை தாங்கினார். மாநிலப் பொறுப்பாளர் க்ருஷ்ண முத்துசாமி சிறப்புரை ஆற்றினார்.

திரு.தெய்வப்ரகாஷ் தனது தலைமையுரையில் ஹிந்துத்வம் குறித்தும், ஹனுமனைக் குறித்தும் விளக்கினார்.

சிறப்புரை ஆற்றிய திரு.க்ருஷ்ண முத்துசாமி தனது உரையில்

ஹனுமான் சக்தி மிக்கவர். நாம் அனுமனை வழிபடவேண்டும். ராமருடைய ஆலயம் அமைத்திட ஹனுமனின் அருளை வேண்டி நாடு முழுவதும் ஜெபவேள்வி நடந்து வருகிறது.

அயோத்திப் பிரச்சனை வெறும் இந்து – முஸ்லீம் பிரச்சனையோ, கோவில் – மசூதி பிரச்சனையோ அல்ல. மாறாக இது நமது பாரத நாட்டின் தன்மானப் பிரச்சனை.

சுதந்திரம் அடைந்தவுடன் குஜராத் சோமநாதர் ஆலயத்தினை ஜெய் சோமநாத் என்ற முழக்கமிட்டு மீட்டார் நமது முதல் உள்துறை அமைச்சரும், துணைப்பிரதமரும் ஆன வல்லபபாய் பட்டேல்.

அயோத்தி கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதனை இடித்த பாபர் ஒரு நெறியாளரோ, மத்த்தலைவரோ அல்ல. மாறாக இந்த நாட்டினை ஆக்கிரமிக்க வந்த ஆக்கிரமிப்பாளன். அவரது படைத்தலைவரான மீர்பாகியினால் உடைக்கப்பட்ட இந்த ஆலயத்தினை மீட்க இதுவரை 76 முறைகள் போர்கள் நடந்துள்ளன. அதில் மூன்றரை லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.

அயோத்திப் பிரச்சனையில் – அதே இடத்தில் இருந்த்து ராமர் ஆலயம்தான் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. மற்ற மத்த்தினர் உடனடியாக இந்த தீர்ப்பினை ஏற்று, கோவில் கட்ட அந்த இடத்தினை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். மாறாக இந்துக்களுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்துக்களுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸின் வஸந்த் ஸாத்தே போன்றோர் ஓரங்கட்டப் பட்டனர்.

இந்துக்கள் ஒருங்கிணைந்தால் இந்த ஆலயம் கட்ட அனைத்து அரசியல்வாதிகளும் போட்டிபோட்டு கொண்டு முன்னால் வருவர். ஆயிரம் வருட கண்ணகி சிலையினை மீட்க போராடிய அதே உணர்வுதான், ராமர் ஆலய போராட்டத்திலும் இருக்கிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் ராமர் கோயில் பிரச்சனைப் தேவைதானா என்று இந்துக்களிடம் கேட்பவர்கள், இதே கேள்வியினை முஸ்லீம்களிடம் கேட்பதில்லை.

கம்யூனிஸ்டு கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் “அதே இடத்தில்தான் கோவில் கட்ட வேண்டுமா? சிறிது தள்ளி கட்டக்கூடாதா?என்று கேட்டார். நான், “உங்களது கொடிக்கம்பத்தில் எங்களது கொடியினை ஏற்றுகிறேன். நீங்கள் பக்கத்தில் ஒரு கொடிக்கம்பம் நட்டு அதில் உங்களது கொடியினை ஏற்றிக் கொள்ளுங்கள். தேவையெனில் அந்த கொடிக்கம்பம் செய்யும் செலவினையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.“ என்றதற்கு அவர் வெகுண்டார். சாதாரண கொடிக்கம்பத்திற்கே இப்படி என்றால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்லாயிரக்கணக்காக வழிபட்டு வரும் ராமர்ஆலயத்தினை மீட்பது எத்துனை முக்கியம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ராமர் ஆலயப் பிரச்சனையில் தாய்மார்களின் பங்கு முக்கியமானர். மகிஷாசுரனை அழித்த பராசக்தி போன்று பெண்கள் இந்த போராட்ட்த்தில் வெகுண்டெழ வேண்டும்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் தனது புத்தகத்தில் – போலந்தில் கம்யூனிஸ்டு ஆட்சியினை அகற்றி விட்டோம். போப்- அமெரிக்க கூட்டணி ரஷ்ய நாட்டினை சிதறடித்து விட்டது. பாரத நாட்டினையும் சிதறடிக்க முயன்றோம். ஆனால் ராமர் ஆலய போராட்டம் மக்களை ஒருங்கிணைத்து எங்களது எண்ணத்தினை ஈடேற விடாமல் செய்துவிட்டது. – என்று எழுதி இருக்கிறார்.

ஆகவே இந்த ராமர் ஆலயப் போராட்டம் தேசத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் புரிந்து கொண்டு, மீண்டும் அதே இடத்தில் பெரிய ராமர் ஆலயம் அமைந்திட பாடுபடுவோம்.

நிறைவில் அஜய்குமார் நன்றியுரை வழங்கினார்.

ஹனுமன் சாலிஸா பாடப்பட்டது. அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் வேள்வியில் அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீப ஆராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 100 ஆண்களும், 90 பெண்களும் கலந்து கொண்டனர்.